Bitcoin என்பது என்ன? (பாகம் இரண்டு)
3. மத்தியமயப்படுத்தப்பட்ட பணம் (Centralized Money)
நாணயங்களின் வழங்கல் (Money supply) மீது நாம் அதிகாரங்களை யாருக்காவது வழங்கும்போது அவர்களுக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை நாம் வழங்குறோம்.
இது மூன்று பிரதான சிக்கல்களை உருவாக்குகிறது.
ஊழல் (Corruption)
வங்கிகளுக்கு பணத்தினை அல்லது அதன் பெறுமதியை உருவாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படும்பொழுது உண்மையில் அவர்கள் உலகத்தில் பணத்தின் பெறுமதியின் போக்கை நிர்ணயிக்கும் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். பணம் ஊழலுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் வெல் பார்கோஸ் ஊழல் (Wells Fargo’s scandal). இந்த ஊழலில் வங்கி ஊழியர்கள் அவர்களது வாடிக்கையாளர்கள் பல வருடங்களாக அறியாதவாறு இரகசியமாக மில்லியன் கணக்கில் அதிகாரபூர்வமற்ற வங்கிக் கணக்குகளையும் கடன் அட்டைக் கணக்குகளையும் உருவாக்கி வங்கியின் வருமானத்தை பாரியளவில் அதிகரிக்க வைத்தனர்.
தவறான மேலாண்மை (Mismanagement)
மத்திய அதிகாரனமானது அது கட்டுப்படுத்தும் மக்களுடன் ஒத்துப் போகவில்லை எனில் அங்கு அது பணம் தொடர்பான ஒரு தவறான மேலாண்மையை ஏற்படுத்தும். இது 2008 இல் நிகழ்ந்தது போல ஒரு குறிப்பிட்ட வங்கியை அல்லது நிறுவனத்தை சரிவில் இருந்து காப்பாற்ற நாணயங்களை பெருமளவில் அச்சிட வழிவகுக்கும்.
நாணயங்களை அதிகளவில் அச்சிடுவதால் பாரிய விளைவுகளாக பண வீக்கம் ஏற்படுவதுடன் நாட்டு மக்களின் பணத்தின் பெறுமதியில் பாரியளவு வீழ்ச்சியும் ஏற்படும்.
இதற்கு மிகச் சிறந்த உதராணம் வெனிசுலா நாடு. இங்கு அரசானது மிக அதிகளவில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டமையால் இறுதியில் நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக சரிந்து மக்கள் நாணயங்களை எண்ணுவதற்கு பதிலாக பணத்தின் நிறையின் அடிப்படையில் பெறுமதியைக் கணிக்க வேண்டிய மோசமான நிலைக்கு உள்ளாயினர்.
கட்டுப்பாடு (Control)
அரச நாணயத் தாள்களில் நாம் பொதுவாக அரசுக்கோ அல்லது வங்கிக்கோ எமது பணம் தொடர்பாக பூரண அதிகாரத்தை வழங்குகின்றோம். இதனால் எந்த ஒரு நேரத்திலும் அரசானது எமது வங்கிக் கணக்கை நிறுத்தவோ அதனை நாம் உபயோகிப்பதை தடை செய்யவோ முடியும். இந்த வகையில் நாம் அரசினால் அச்சிடப்பட்ட பௌதிக நாணயத் தாள்களை உபயோகித்தால் கூட சமீப காலங்களில் இந்தியாவில் நடந்தது போன்று நாணயத் தாள்களின் செல்லுபடியாகும் தன்மையை அரசாங்கத்தினால் எந்த நேரமும் தடை செய்ய முடியும்.

2009 ஆம் ஆண்டு வரை இதுதான் பணத்தின் நிலையாகக் காணப்பட்டது. அதாவது சமகாலத்தில் காணப்படும் பணத்திற்கான ஒரு மாற்றீடை உருவாக்குவது ஒரு தோல்வியடைந்த முயற்சியாகவே காணப்பட்டது. ஆனால் 2009 இற்கு பிறகு இதில் மாற்றம் ஏற்பட்டது.
4. Bitcoin என்றால் என்ன?
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Satoshi Nakamoto என்றழைக்கப்பட்ட ஒரு நபரினால் இணையத்தில் ஒரு ஆவணம் ஒன்று வெளிவிடப்பட்டது. வெள்ளைக் காகிதம் (White paper) என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆவணம் மத்தியமயப் படுத்தப்படாத (Decentralized) Bitcoin என்னும் ஒரு நாணயம் உருவாக்கப்படக்கூடிய வழிமுறை குறித்து ஒரு ஆலோசனையை வழங்கியது.
இந்த வழிமுறையானது மத்திய அதிகாரம் கொண்ட ஒரு குழு இன்றி இரட்டை செலவு சிக்கல்களுக்கு தீர்வினை வழங்கக்கூடிய ஒரு எண்ம அல்லது டிஜிட்டல் நாணயத்தினை உருவாக்க முடியும் என்று தெரிவித்தது.
இதன் அடிப்படையில் Bitcoin என்பது மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிராத ஒரு திறந்த அல்லது வெளிப்படையான பதிவேடு (Transparent Ledger) ஆகும். இந்த குழப்பமான சொற்றொடரின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.
Bitcoin நாணயத்தினை ஒரு வங்கியுடன் ஒப்பிடுவோம். இன்று அதிகளவில் பணமானது டிஜிட்டல் முறையில் காணப்படுவதால் வங்கிகள் தமது சொந்தப் பதிவேடுகளில் வாடிக்கையாளரின் நிலுவைகளையும் பரிவர்த்தனைகளையும் நிர்வகிக்கின்றன. இருந்தாலும் இந்தப் பதிவேடுகள் வெளிப்படையானவை அல்ல என்பதுடன் வங்கிகளின் பிரதான கணினிகளிலேயே இவை சேமிக்கப் பட்டிருக்கும். இந்தப் பதிவேடுகளை யாராலும் நோட்டம் விடமுடியாது என்பதுடன் வங்கிகளிடமே இதற்கான முழு அதிகாரங்களும் காணப்படும்.
இதற்கு மாறாக Bitcoin என்பது முழுமையாக ஒரு திறந்த பதிவேடு (Transparent Ledger) ஆகும். எந்த வேளையிலும் யாரும் இந்த திறந்த பதிவேடுகளைப் பார்வையிடலாம் என்பதுடன் நடைபெறும் எல்லா பரிவர்த்தனைகளையும் அதன் நிலுவைகளையும் கூட பார்வையிடலாம். ஆனால் அதேநேரம் யாரிடம் எவ்வளவு நிலுவை உண்டு என்பதையும் யார் இந்த பரிவர்த்தனைகளின் பின்னால் இருக்கிறார்கள் என்பதையும் மட்டும் இங்கு உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
இதனால் Bitcoin என்பது ஒரு போலி அனாமதேயம் (Pseudo Anonymous) எனப்படுகிறது. இங்கு நடைபெறும் எல்லாமே வெட்ட வெளிச்சம். எவராலும் அவதானிக்க முடியும். ஆனாலும் கூட உங்களால் யார் பணம் வைத்துள்ளார்கள் யாருக்கு அந்த பணத்தினை அனுப்புகிறார்கள் என்று பின்தொடர முடியாது.

இதனை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். கீழுள்ள படங்களில் முதலாவதைப் பாருங்கள். அந்தப் படத்திலே ஒரு Bitcoin முகவரியிலிருந்து இன்னுமொரு Bitcoin முகவரிக்கு 10,000 Bitcoin கள் மே 2010 இல் அனுப்பப் பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைதான் Bitcoin மூலம் உலகில் நடைபெற்ற முதலாவது பரிவர்த்தனையாகும். லாஸ்லோ என்னும் நபரினால் இரண்டு பீசாக்களை கொள்வனவு செய்வதற்காக இந்த Bitcoin கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. லாஸ்லோ என்பவர் தன்னிடம் உள்ள 10,000 Bitcoin களுக்காக இரண்டு பீசாக்களை தருமாறு ஒரு பதிவினை இட்டிருந்ததன் அடிப்படையிலேயே இந்த பரிவர்த்தனை Bitcoin கள் மூலம் நிகழ்ந்தது. ஏறத்தாழ பத்து வருடங்களின் முன் இந்த பரிவர்த்தனை நடந்து முடிந்திருந்தாலும் இன்று அந்த இரண்டு பீசாக்களின் விலையும் நூறு மில்லியன் டொலர்களுக்கும் மேல்.
Bitcoin கள் மத்தியமையப் படுத்தாத பொறிமுறைகளை கொண்டவை
Bitcoin களினை பரிபாலிக்கும் பதிவேடுகள் எங்கோ ஒரு தனிக் கணினியில் சேமிக்கப் படுவதில்லை. மாறாக இந்த பொறிமுறையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கணினியும் இந்தப் பதிவேட்டில் ஒரு பிரதியினைக் கொண்டிருக்கும். இதுவே Blockchain என அழைக்கப்படுகிறது. எனவே ஒரு நபருக்கு Bitcoin பதிவேட்டினை ஊடுருவி தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பதிவேடுகளின் பிரதிகளைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கணினிகளையும் ஊடுருவ வேண்டி இருக்கும். இது மிக மிக சிரமமானது. Bitcoin இல் உள்ள அதி சிறந்த பாதுகாப்பும் இதுதான்.
Bitcoin கள் முழுமையாக டிஜிட்டல் முறையானது
Bitcoin நாணயத்தில் பௌதிக ரீதியான நாணயம் என்பதே இல்லை. இது முழுமையாக டிஜிட்டல் அல்லது எண்ம முறையானது. படங்களில் நீங்கள் காணும் Bitcoin கள் எல்லாம் வெறும் சித்தரிப்புகளே. அவற்றை பௌதிக ரீதியில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது. Bitcoin இல் உள்ளவை யாவும் பரிவர்த்தனை நிரல்களும் நிலுவைகளுமே. உங்களிடம் Bitcoin உள்ளது என்றால் அதன் அர்த்தம் உங்களுக்கு Bitcoin இன் Blockchain பதிவேட்டில் ஒரு குறிப்பிட்ட முகவரியை அணுகுவதற்கான அனுமதி உண்டு என்பது மாத்திரமே. அந்த Bitcoin முகவரி மூலம் நீங்கள் இன்னுமொரு Bitcoin முகவரிக்கு பணத்தினை மாற்றம் செய்ய முடியும்.