வடமொழியில் „அதோமுகம்“ என்றால் „கீழ்நோக்கும் முகம்“ என்று பொருள். சுவானம் என்றால் நாய். இந்த ஆசனம் நாய் சோம்பலை முறிப்பதற்காக முதுகை நன்றாக நீட்டுவது போல் இருப்பதால் இதற்கு அதோமுக சுவானாசனம் என்று பெயர்.
கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கால்கள் வளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் பாதங்கள் முழுமையாக தரையில் பதிந்திருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது. இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்த நிலையில் மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை உள்ளிழுத்தவாறு ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
பலன்கள் :
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு தீரும்.
கைகளும் தோள்பட்டைகளும் இணையும் இடங்களில் உராய்வினால் வரும் வலிகள் நீங்குகிறது. தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.
கையின் மணிக்கட்டு, தசைநார்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம். நாட்பட்ட தலைவலி சரியாகும்.
முதுகுப் பகுதிகளின் பிடிப்புகள், சுளுக்குகள் நீங்க உதவி புரிகிறது. அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்
தொடைகளின் பின்பகுதி, முழங்கால், கணுக்கால் பகுதிகளை வன்மையடையச் செய்கிறது.
முதுகு தண்டுவடப் பகுதியை வன்மை அடையச் செய்கிறது. இரு கை மற்றும் கால்களுக்கு உறுதித் தன்மையை அளிக்கிறது. இந்த ஆசனம் தோள்பட்டை வலியைப் போக்கி வலுப்படுத்தும் சிறந்த இருக்கை ஆகும்.
தலைப் பகுதிக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதால் ஏற்படும் தொப்பையை குறைக்க உதவுகிறது. கழுத்து எலும்புகளை உறுதியடையச் செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சரிசெய்ய உதவுகிறது.
பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் நிலையில் வியர்க்கும். தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை இருக்கும். இது எல்லாவற்றையும் இந்த இருக்கை சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குகிறது.
நன்றி.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.