தரைவிரிப்பின் மீது குப்புற படுக்கவும். கைகள் இரண்டும் உடலினை ஒட்டியபடி உள்ளங்கை இரு தொடைகளுக்கும் அடியில் தரையை அழுத்தியபடி வைத்துக்கொள்ளவும்.
இனி மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இருகால்களையும் மடங்காமல் நேராக நீட்டிவைத்தபடியே மெதுவாக மேலே உயர்த்தவும். முகவாய், மார்பு, வயிறு, இடுப்பு வரை உள்ள பகுதி தரையில் நன்கு அழுத்தியபடி இருக்கவும். கால்கள் மட்டும் சாய்வான நிலையில் மேலே தூக்கியபடி இருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
முதலாவது படத்தில் காட்டப்பட்டவாறு இந்த இருக்கையின் அரை நிலை செய்வதானால் வலது, இடது இரு புறமும் மாறி மாறி செய்ய வேண்டும்.
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
வெட்டுக்கிளி இருக்கை பயன்கள்
சலபாசனமும் முதுகு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும். குறிப்பாக, முதுகுத் தண்டுவடத்தில் L 4, L 5 பகுதியில் பிரச்னை உள்ளவர்களுக்கும், தசைப்பிடிப்புச் சிக்கல் உள்ளவர்களுக்கும் இது நல்ல பலன்தரும்.
முதுகுத் தண்டு வட எலும்புகளை சீரான இயக்கம் பெற செய்கிறது. முதுகு தண்டு வட நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்து இயல்பு நிலையில் இருக்க உதவுகிறது.
முதுகு பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது. கழுத்து பகுதி தசைகளை வன்மையடையச் செய்து கழுத்து வலி, கழுத்து எலும்பு மூட்டுகளில் குறைபாடு இவற்றை சரி செய்கிறது.
வயிற்று பகுதியின் பருமனை குறைக்க உதவுகிறது.
வயிற்றின் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை சீராக்கி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது
நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் பலப்படுத்துகிறது. கணையத்தை பலப்படுத்துவதில் இவ்வாசனம் மிக சிறப்பாக செயல்படுகிறது..
சிறுநீர் பிரச்சனைகளை சரி செய்து நன்மையளிக்கிறது. கருப்பை வன்மை குறைவான பெண்களுக்கு வன்மையடையச்செய்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை சீர் செய்து இயல்பான மாதவிடாய்க்கு வழி வகுக்கிறது.
இது மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக ஆஸ்துமா முதலிய நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவர சிறந்த ஆசனம்.
குறிப்பு::
வயிறு, முதுகில் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
இதயக்கோளாறு உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
நன்றி.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.