கலப்பை நிலத்தை உழுது பண்படுத்துவதுபோல் உடலிலுள்ள நரம்புகளை எல்லாம் பக்குவப்படுத்தி, இடுப்பில் உள்ள தேவையற்ற சதைகளை கரைக்கக் கூடிய தன்மை கொண்டதால் இந்த நிலை கலப்பை இருக்கை (ஹலாசனம்) எனப் பெயர் பெற்றது.
தரை விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்.. இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டிய நிலையில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும். . கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி பின் மூச்சை வெளியே விட்டவாறு இரண்டு கால்களையும், தலைக்கு பின்னே மெதுவாக கொண்டு வந்து, தரையை தொடவும். அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை உள்ளே இழுத்துக் கொண்டே, இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி பின் மூச்சை வெளியே விட்டவாறு இரண்டு கால்களையும் மீண்டும் தரையை நோக்கி மெதுவாக கொண்டு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
கால்களைத் தலைக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று பாதங்களைத் தரையில் தொட முடியாதவர்கள் தங்களால் இயன்றவரை கால்களைத் தலைக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று வைத்திருங்கள் (படம் 1)
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
பயன்கள்
முதுகு நன்றாக வளைக்கப்படுவதால் முதுகுப் பகுதிக்கு இரத்த ஒட்டம் அதிகரித்து முதுகு வலுவடைகிறது.
நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்க்கியை அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்குகிறது.
கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல் தன்மையை சீர்செய்து செரிமான மற்றும் உட்கிரகித்தல் பணியை செவ்வனே செயல்படுத்துகிறது.
கணையத்தின் சுரப்புத் தன்மையினை சீர் செய்து உடலைக் காக்கிறது.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளையும், கருப்பை கோளாறுகளையும் சரி செய்கிறது.
நாளமில்லா சரப்பிகளின் இயக்கத்தை சீர் செய்து, மலட்டுத்தன்மையை போக்குகிறது. முள்ளந்தண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நோய்களையும் சீராக்க உதவுகிறது.
அடிவயிற்று சதை கரையும்
மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது..
அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த இருக்கை.
குறிப்பு:
முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், இந்த இருக்கையினைத் தவிர்க்க வேண்டும்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.