கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மச்சாசனதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள். கால் மற்றும் கைகளை நேராக வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சு விடவும். இப்போது மெதுவாய் இரண்டு முழங்கைகளை ஊன்றி உடலை மட்டும் தூக்குங்கள். முழங்கைகளை ஒரு நெம்புகோலாக பயன்படுத்தி வயிற்றையும் மார்பையும் தூக்கவேண்டும். இது முதுகுத் தண்டை வளைக்க உதவுவதுடன் தலையை தரையில் முறையாக வைக்கவும் உதவுகிறது.
இடுப்புப் பகுதி தரையிலேயே இருக்க வேண்டும். பிறகு மார்பினை மேலே உயர்த்தி தலையை இப்போது தரையில் முட்டுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.
அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் கைகளை முன்னர் போலவே கைகளை ஊன்றி தலையை மெதுவாக உயர்த்தி கழுத்திற்கு அதிகம் சிரமம் தராதவாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது மெதுவாய் மார்பை தரையில் பதித்து இயல்பு நிலையில் படுத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்ப நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம்.
அவரவர் உடல்வாகுக்கு ஏற்றாற்போல் படத்தில் காட்டியுள்ளவாறு செய்து கொள்ளலாம். தலையைத் தூக்கி நிமிர்த்தி வைத்திருக்கக் கடினமானர்வர்கள் படம் 1ல் காட்டப்பட்டுள்ளவாறு பிடரிப்பகுதியில் தலையணை போன்றவற்றை உபயோகப்படுத்தலாம்.
பலன்கள் :
மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது. கழுத்து, தோள்பட்டை வலியை குணப்படுத்தும்.
சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.
நெஞ்சு நன்றாக விரிவடைவதால், நுரையீரல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது. நுரையீரல் சிறப்பாக செயல்பட்டு புதிய பிராண வாயுவை தக்கவைக்கும்.
தைராய்டு சுரப்பியை கட்டுப்படுத்துகிறது.
தண்டுவட எலும்புகள், கழுத்துப் பகுதிகள் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகரிக்கும். மேலும் அது விரிவாகும்.
நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா தைராய்டு முதலியவற்றுக்கு உகந்த இருக்கை.
குறிப்பு:
நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வலி இருந்தால் இந்த இருக்கையை செய்ய வேண்டாம்.
அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மற்றும் குறைவான ரத்த அழுத்தம், உள்ளவர்கள் இந்த இருக்கையை செய்ய வேண்டாம்.
முதுகு மற்றும் இடுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள், கீழ் முதுகு வலி உள்ளவர்களும் இந்த இருக்கையை செய்ய வேண்டாம்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.