கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி எடப்பள்ளியில் ஸ்ரீசாந்தின் வீடு அமைந்துள்ளது. ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாத நிலையில், அவரது மனைவி, குழந்தை மற்றும் இரு பணியாட்கள் மட்டும் முதல் தளத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் தரைதளத்தில் தீப்பற்றியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த ஸ்ரீசாந்தின் மனைவியும், பணியாட்களும் உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளனர்.
கூச்சல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் முதல் தளத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று ஏணி மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு அறைகள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணங்கள் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.