அம்பாறை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்தம் சதுக்க முன்றலிலிருந்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசமெழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
‘வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே’, ‘அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே’, ‘பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கு’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்க கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
