நேற்யை தினம் மாலை சுமார் பி.ப 4.00 மணியளவில் செங்கலடிச் சந்தியில் கார் விபத்து ஒன்று நிகழ்ந்திருந்தது. இது சம்பந்தமான செய்தியை எமது செய்தித் தளத்தில் பிரசுரித்து இருந்தோம்.
இது போன்று விபத்துக்குள்ளாகி மரணமடையும் நபர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி இப்பதிவை பதிவிடுகின்றேன்.
இது போன்று விபத்துள்ளாகி மரணம் ஏற்பட்டு இழப்புக்களை சந்திக்கும் குடும்பத்துக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சிறியதொரு பணத்தொகையை வழங்கி அதிலிருந்து விடுபட்டு செல்கின்றனர். ஆனால் அப்பணமானது அவர்களது குடும்ப வாழ்க்கைக்கு இறுதிவரை உதவுமா என்றால் அது சந்தேகமே. சில நேரங்களில் அப்பணம் அம் மரணச் செலவிற்கே போதுமானதாகவே அமைந்துவிடும். எனினும் அக் குடும்பம் எதிர்காலத்தில் பணக் கஷ்டத்தில் பல இன்னல்களை அனுபவிக்ககூடும். ஆகையால் கீழே தரப்படும் விடயமானது அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவும் என நம்பி இதனை பதிவிடுகின்றேன்.
நேற்று நடந்த மரணம் கார் ஒன்றினால் ஏற்பட்ட மரணமாகும். பொதுவாக காரினை காப்புறுதி செய்யும் போது பொதுக் காப்புறுதியில் முழுக் காப்புறுதி (Full Insurance) செய்யப்படுகின்றது. இதில் உள்ளடங்கலாக மூன்றாம் நபர் காப்புறுதி (Third party Insurance) இருக்கும். இது அணைத்து வாகனங்களுக்கும் பொதுவாக இருப்பதோடு தனிப் பாவனைக்குரிய காருக்கு வரையறை அற்ற மூன்றாம் நபர் காப்புறுதி வழங்கப்பட்டு இருக்கும் இது இந்த காரின் மூலம் மூன்றாம் நபர் அல்லது பொது உடமைகள் சேதமாக்கப்படுமிடத்து அதற்குரிய உரிய முறையில் நஷ்டஈட்டை கோருகையில் காரின் காப்புறுதி கம்பனியானது அவ் இழப்பீட்டினை வழங்கி வைக்கும்.
முறைப்பாடு செய்யும் முறை
பாதிக்கப்பட்ட நபர் விபத்து ஏற்படுத்திய நபர் மீது அல்லது கார் காப்புறுதி செய்யப்பட்ட கம்பனி மீது முறைப்பாடு செய்யப்பட்டு அம்முறைப்பாடானது பொலிஸ் மூலம் நிதிமன்றத்துக்கு வழக்கு கொண்டு செல்லப்படும் அல்லது கொண்டு செல்வதற்கு கோரிக்கை விடுத்தல் வேண்டும்.
வழக்கு தவணையில் தங்களது இழப்பீட்டு தொகையை வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் முறையிடும் போது எதிராளியான காப்புறுதி கம்பனி அல்லது சாரதிக்கு அறிவிப்பதன் மூலம் அத் தொகையை செலுத்துவதற்கு தயாராகும்.
இழப்பீட்டு தொகையை கணிக்கும் முறை
பொதுவாக பொருட்கள் பிராணிகள் போன்றவற்றின பெறுமதியை சந்தைப் பெறுமதியை வைத்து கணிக்க முடியும். ஆனால் மனிதர்களுக்கு கணிப்பது இலகுவான விடயம் இல்லை இதனால் நீதிமன்றத்தில் மனித ஆயுளுக்காக கணிக்கப்படும் அட்டவனையை விளக்கமாக இதில் குறிப்பிடுகின்றேன்.
இறந்தவரின் மாத வருமானம் 30,000/= ஆக இருக்குமானால் அதை வருடத்திற்கு கணக்கிட்டு அதனை 100 பெருக்கி அரச வங்கி ஒன்றினால் சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி வீதத்தால் வகுக்கப்படும்.
உதாரணமாக – 30,000 x 12 x 100 ÷ 4.5 = 8,000,000/=
இப் பெறுமதி தொகையை இழப்பீட்டாளர் காப்புறுதி கம்பனியிடம் இழப்பீட்டு தொகையாக முன் வைக்க முடியும் (குறைந்தது இத் தொகையை கேட்பதற்கு உரிமையுண்டு)
இவ்வாறான விபத்துக்கள் மூலம் பறிக்கப்படும் உயிர்களுக்கு நிகர் எதுவுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அக் குடும்பங்கள் அடுத்த கட்டநிலைக்கு செல்ல வேண்டும் அதற்கான சிறிய பிடிமானமே இந்த இழப்பீட்டு தொகையாகும்.