பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர்.
விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர்.
விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனைவரும் திகைத்துப் போயிருந்த நிலையில், ஊழியர் ஒருவர் பயணிகள் வரிசைக்கு சென்று ஒருவரிடம் உதவி கோரவே அவர் எழுந்து விமானியின் அறைக்குள் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் ஒரு மருத்துவ அவசர நிலை காரணமாக, விமானம் அருகிலுள்ள போர்ட்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருப்பதாக விமான ஊழியர்கள் பயணிகளுக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதுடன், சக்கர நாற்காலி கொண்டு வரப்பட்டு அதில் விமானி அமர்த்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதன் பின்புதான், விமானத்தை செலுத்திய விமானி, பாதி வழியிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கிய விடயம் தெரியவந்துள்ளது.
அதிஷ்டவசமாக, அதே விமானத்தில் விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி பயணம் செய்திருந்தார். விமான ஊழியர்கள் அவரிடம் சென்று உதவி கோரியவுடன், அந்த விமானிதான் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
விடுமுறையிலேனும் குறித்த விமானி மாத்திரம் அந்த விமானத்தில் இல்லையென்றால் இந்த செய்தி வேறு மாதிரியாக வெளிவந்திருக்க வாய்ப்புள்ளது.