விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் படிப்படியாக கடினமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கிற பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் ஆயுள்காலம் 14 நாட்கள் என்பதால், இன்னும் 6 நாட்கள்தான் மீதமுள்ளது.
இந்த ஆறு நாட்களில் தொடர்பினை ஏற்படுத்த முடியாவிட்டால் பின்பு லேண்டர் மூலம் எவ்வித பயனையும் பெறமுடியாது. இந்நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக இஸ்ரோவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது படிப்படியாக கடினமாகி வருவதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திலும் அதன் மின்கலம் சக்தியை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிலவின் தென் துருவப்பகுதியில், கடந்த 7 ஆம் திகதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிலவுக்கு 2.1 கிலோ மீற்றர் அருகே வந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் விக்ரம் லேண்டர், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீற்றருக்கு தொலைவில், விழுந்து கிடப்பது ஓர்பிட்டர் கருவி மூலம் கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ தொடர்ச்சியாக திவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் தொடர்ந்து ரேடியோ சிக்னல்களை அனுப்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.