அடிப்படை புரிதல் இல்லாமல் 13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது வெட்கக்கேடான விடயம் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 13 ஆவது திருத்தத்தில் அமைச்சர்களை நியமிக்கும் அல்லது நீக்குவைது முதலமைச்சரின் பரிந்துரையில் ஆளுநர் என்ற விடயம் தெளிவாக கூறப்பட்டுள்ளதை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்தோடு மத்திய அமைச்சரவை நியமிக்கும் அல்லது நீக்கும் நடவடிக்கையும் இந்த நடவடிக்கையின் பிரகாரமே இடம்பெறுகின்றது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவற்றை தெரிந்துகொள்ளாமல் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவது அப்பட்டமான பொய் என்றும் கூறினார்.
வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பா.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த தீர்ப்பு தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த சி.வி. விக்கினேஸ்வரன், நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.