உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
ஆபத்தான விமான நிலையங்களில் தரையிறங்கும் போது, உங்களது சீட் பெல்ட்களை சரியாகப் பொருத்தி தயாராக இருங்கள். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு காரணமாக ஊகிக்க முடியாத காலநிலை, மிகச்சிறிய ஓடுதளம், இடத்தின் சூழல் உள்ளிட்டவை கூறப்படுகிறது. இங்கு தரையிறங்க விமான ஒட்டி தனது முழுத் திறனையும், அனுபவத்தையும் ஒருங்கே செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பறப்பதில் அச்சம் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த விமான நிலையங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
உலகில் ஆபத்தான நிலையில் தரையிறங்கும் பல விமான நிலையங்கள் உள்ளன. இப்படிப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது மற்றும் புறப்படும் போது ஏற்படும் பயத்தினால் பிரார்த்தனை செய்து கொண்டும், சீட் பெல்ட்களை சரியாகப் பொருத்தி கொண்டும், வயிற்றுக்குள் ஒரு கொந்தளிப்பை அனுபவித்து கொண்டும் பயணம் செய்கின்றனர்.
1. பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம், செயின்ட் மார்டின் (Princess Juliana International Airport, St. Marteen)
செயிண்ட்-மார்ட்டின் தீவின் டச்சு பகுதியில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையம் கரீபியனின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.இது உலகின் மிக ஆபத்தான பத்து விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஓடுபாதையின் நீளம் 2180 மீட்டர் மட்டுமே. இது 2500 மீட்டருக்கு குறைவாக உள்ளதால் பெரிய விமானங்கள் தரையிறங்க போதுமானதாக இல்லை.

மேலும் ஓடுபாதையின் முன்னால் அமைந்துள்ள கடற்கரையின் நீளத்துடன் சேர்த்து பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு விமானம் கடற்கரையில் இருக்கும் மக்களின் தலைக்கு மேலே சில அடி தூரத்தில் பறந்து சென்று தரையிறங்குகிறது. மேலும் இது கடற்கரையை ஒட்டி தரை இறங்குகிறது. இதனால் விமான எஞ்சினிலிருந்து வரும் காற்றின் அழுத்தத்தின் காரணமாக கடற்கரையின் மணல் மற்றும் காற்று அங்குள்ள மக்களை பாதிக்கிறது. இப்படிப்பட்ட அசாதாரண தரையிறங்கும் நிலைமைகள் இருந்தபோதிலும், ஒரு விபத்து கூட இங்கு இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
2. ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம்(Gibraltar International Airport)
குழந்தைகளாகிய நாம் அனைவரும் ஒரு கார் ஜன்னல் வழியாக ஒரு விமானம் பறப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஜிப்ரால்டரில், நீங்கள் அதைப் பார்க்க முடியாது. இதன் முக்கிய ஓடுதளம் நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. இது ஜிப்ரால்டர் மற்றும் ஸ்பெயினை இணைக்கும் முக்கிய சாலையாகும். இது வின்ஸ்டன் சர்ச்சில் சாலைக்கு செங்குத்தாக இருக்கிறது.

ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்கும் போதும், சாலையின் இருபக்கத்திலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த ஓடுதளத்தின் இருபக்கமும் மத்திய தரைக்கடலில் சென்று முடிவடைவது அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. எனவே இந்த விமானம் தரையிறங்கிய உடன், விமான ஓட்டிகள் உடனடியாக பிரேக்கை இயக்குவது முக்கியமானதாக உள்ளது.
3. கிஸ்போர்ன் விமான நிலையம்(Gisborne Airport)
விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ஜிப்ரால்டர் விமானம் நிலையம் சாலைப் போக்குவரத்தைத் தடுக்கும்போது, கிஸ்போர்ன் ஒரு படி மேலே சென்று ரயில் பாதை விமான ஓடுபாதையுடன் குறுக்கிடுகிறது. ஆனால் விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ரயில் மற்றும் விமானம் வரும் நேரங்களை கிஸ்போர்னில் கவனிக்கபடுகிறது. இது தவிர, இந்த விமான நிலையத்தில் மூன்று புற்களால் ஆன ஓடுபாதைகள் உள்ளது.

4. நர்சர்சுவாக் விமான நிலையம்,கிரீன்லாந்து (Narsarsuaq Airport, Greenland)
கிரீன்லாந்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம் நர்சர்சுவாக் ஆகும். கடுமையான காலநிலை மற்றும் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட தீவில் ஓடுபாதை அமைந்துள்ள இடம் பனியினால் உறைந்திருக்கும். இந்த உறைபனி ஓடுபாதைகள் விமான நிலையத்தால், விமானிகள் விமானத்தை இயக்க கூட அஞ்சுகின்றனர். மேலும் விமான நிலையம் கடுமையான காற்று மற்றும் மூடுபனியினால் நிறைந்திருப்பதால் அவை தரையிறங்குவதற்கு மிகவும் கடினமானது. இன்னும் ஆபத்தான நிலையில் ஓடுபாதையின் முன் பகுதியில் தண்ணீர் மற்றும் அதன் பின்னால் ஒரு மலை உள்ளது. குளிர்காலத்தில் எல்லாம் இந்த விமானம் தரையிறங்க இன்னும் ஆபத்தானது.

5. மெக்முர்டோ விமான நிலையம், அண்டார்டிகா(McMurdo Air Station, Antarctica)
குறைந்த பட்சம் மக்கள் பயணிக்கும் விமான நிலையம் மெக்முர்டோ விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் நிரந்தரமாக உள்ள உறைபனி காலநிலையினால், ஓடுபாதை கூட பனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இங்கு இரவுகளில் செல்ல கூலிங் கிளாஸ் மிகவும் அவசியம். ஏனென்றால் நடு இரவில் கூட சூரியன் இருப்பதால், சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் மிக அவசியம்.

6. பர்ரா சர்வதேச விமான நிலையம், ஸ்காட்லாந்து (Barra International Airport, Scotland)
டிரைக் மோர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் உள்ளது. இங்கு விமானங்கள் தரையிறங்குவது மிகவும் சாகசமானது. ஏனென்றால் அதிக அலை ஏற்பட்டால் ஓடுபாதை நீரில் மூழ்கும் தன்மை கொண்டது. ஆகவே இந்த விமானங்களை இயக்கும் விமான ஓட்டிகள் அங்குள்ள காலநிலை, அலையின் உயரம் ஆகியவற்றை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். விமான நிலையங்களில் வர்த்தக பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் ஒரே விமான நிலையம் பர்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

7. வெலிங்டன் சர்வதேச விமான நிலையம் (Wellington International Airport)
பிரமீடு வடிவத்தில் ஸ்டீல்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் நியூஸிலாந்தில் அமைந்துள்ளது. இதன் மேற்கூரை முழுவதும் தாமிர தகடுகளை வைத்தும் எஸ்கலேட்டர் உட்பட இதன் உள்புறம் அனைத்தும் மரத்திலான பொருட்களை பயன்படுத்தியும் கட்டியுள்ளனர். இந்த விமான நிலையத்தை தி ராக் என்று அழைக்கின்றனர். இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் தொடக்கமும் முடிவும் கடலுக்குள் உள்ளது. இதன் ஓடுபாதை 1,936 மீட்டர் நீளத்தை உடையதால் இது மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு விமானி இங்கு விமானத்தை தரையிறக்கும் போது மலைகள் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை கடந்து தான் தரையிறக்க வேண்டும்.

8. பரோ விமான நிலையம், பூட்டான்(Paro Airport, Bhutan)
பூடானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக இருக்கும் இந்த விமான நிலையம், ஆழமான பள்ளத்தாக்கு பகுதியோடு நெருக்கமாக அமைந்துள்ளது. இந்த விமானத்தை தரையிறக்கும் விமானிகள் தனி திறமை படைத்திருக்க வேண்டும். இதனால் இந்த விமான நிலையத்தில் 20 க்கும் குறைவான விமானிகள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இது கடல் மட்டத்திலிருந்து 2,225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் இமயமலை உள்ளது. இது 6,500 அடி நீளம் கொண்டது. இந்த விமானத்தில் பயணிக்க பயணிகள் தைரியத்துடன் இருந்தால், அழகிய பரோ நதியை பார்க்கலாம்.

9. டென்ஸிங்-ஹிலாரி விமான நிலையம் லுக்லா, நேபாளம்(Lukla Airport, Nepal)
டென்ஸிங்-ஹிலாரி விமான நிலையம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்த மிகச்சிறிய விமான நிலையம், உலகின் மிக ஆபத்தான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் 527 மீட்டர் மட்டுமே கொண்ட பயமுறுத்தும் குறுகிய ஓடுபாதையுடன் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் ஓடுபாதையில் ஒரு புறத்தில் செங்குத்தான குன்றும், மறுபுறம் கற்களால் ஆன சுவரும் காணப்படுகிறது. இங்கு விமானங்கள் தென்மேற்காக தரையிறங்கி வடகிழக்காக புறப்பட்டுச் செல்லும். இங்கு விமானத்தை தரை இறங்குவது மிகவும் ஆபத்தானது. மலை ஏறும், டிரக்கிங் செல்லும் நபர்களுக்கு இது முக்கியமாக வந்து செல்லும் இடமாக உள்ளது.

10. கோர்செவெல் விமான நிலையம், பிரான்ஸ்(Courchevel Airport, France)
கோர்செவெல் என்பது பிரெஞ்சு ஆல்ப்ஸில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட்டின் பெயர். இங்குள்ள அழகிய பனிமூட்டம் நிறைந்த மலைகள் மற்றும் பனிச்சறுக்கு போன்ற அழகிய காட்சியை பார்க்க ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 527 மீட்டர் ஓடுபாதையை கொண்ட டென்ஸிங்-ஹிலாரி விமான நிலையத்தை விட மிக குறைவான அளவு அதாவது 518 மீட்டர் ஓடுபாதையை கொண்டது தான் கோர்செவெலின் விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் விமானம் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது மிகவும் ஆபத்தானது.
