மல்வானை உளஹிட்டிவல பகுதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வாள்கள் சகிதம் வந்த கும்பலொன்றை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியவில் வீட்டின் மதில் வழியாக நுழைந்த இந்த கொள்ளையர்கள், காவல்காரரை மடக்கிப்பிடித்து அவரின் கை, வாயை கட்டிவிட்டு அவரின் கழுத்தில் கத்தியை வைத்தவாறு வீட்டின் பிரதான கதவை தட்டுமாறு தெரிவித்துள்ளனர். காவல்காரர் கதவை தட்டியபோது வீட்டுக்குள் இருந்தவர்கள் அவரின் குரல் சத்தத்தை மதித்து ஜன்னல் வழியாக என்ன விடயம் என விசாரித்துள்ளனர்.
இருந்தபோதும் அவரினால் வாயை திறந்து கதைக்க முடியாததை உணர்ந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர் கதவை திறந்துள்ளார்.
உடனே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3பெண்களை மடக்கிப்பிடித்து அவர்களை கட்டி வீட்டு வர்த்தகரின் அறையை காட்டுமாறு தெரிவித்துள்ளனர். இதன்போது வீட்டின் மேல்மாடியின் அறையிலிருந்த வர்த்தகரின் மகன் சம்பவத்தை அவதானித்ததும் உடனடியாக தான் இருந்த அறையை மூடிவிட்டு வீட்டுக்கூரையின் மேல் ஏறி வட்சப் மூலம் ஊராருக்கு தகவலை பகிர்ந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் வீட்டை சுற்றி முற்றுகையிட்ட வேளையில், கொள்ளையர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர். இதன்போது இருவர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.
ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச்சென்றவர்களை பொது மக்கள் தேடும்போது, குறித்த கொள்ளை சம்பவத்துக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரும் ஸ்தலத்துக்கு வருகை தந்திருந்தனர். இவ்வாறு பிடிபட்ட மூவரையும் பொது மக்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளர். தொம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.