வத்தளை – ஹேக்கித்த வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தம்பதியினர் வத்தளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (15) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை – மூதூர் பகுதியைச் சேர்ந்ததாக கூறப்படும் குறித்த தம்பதியினரை கைது செய்யும் போது, சந்தேகநபர்களிடம் தேசிய அடையாளஅட்டை இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிற்கு வருகைத் தந்தமைக்கான உரிய காரணத்தை வெளிப்படுத்த, சந்தேகநபர்கள் தயங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்காக அரச புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் தமது பயணப் பையை, முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அதன்பின்னர், வேறொரு முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த தம்மை, குறித்த முச்சக்கரவண்டி சாரதி, வத்தளை பகுதியில் விட்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தம்பதியினரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மூதூர் பொலிஸாரின் உதவியை வத்தளை பொலிஸ் அதிகாரிகள் நாடியுள்ளனர்