வடகொரியாவிற்கு செல்வதற்கு தாம் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ‘அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நட்புறவு நீடிக்கிறது. ஆனால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்போது உள்ள சூழலை பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன். என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிம் ஜாங் உன்னும் அமெரிக்கா வர விரும்புவார் என்று நம்புகிறேன். ஆனால் அது இப்போது இல்லை. நாங்கள் இதனை நோக்கி செல்ல இன்னும் சில காலம் வேண்டி இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேசுவதற்கு வடகொரியா வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.