ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எனவே ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கத் தேவையில்லை என திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மோடி-அமித்ஷாவை மகாபாரதத்தில் இருந்த கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது. எனவே அவரின் கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பணி குறித்த ஆவணப் புத்தகம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் உட்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்குகொண்டனர். இவ்விழாவில் “அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் – அர்ஜூனன் போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என ரஜினிகாந்த் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.