யாழ்ப்பாணத்தில் புதிதாக வாள்வெட்டுக் குழு ஒன்று உருவாகியுள்ளது என்றும்– அந்தக் குழுவினரைப் பிடிப்பதற்கு சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டாகாசம் தொடர்ந்தவாறு காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் பாசையூரைத் தளமாகக்கொண்டு தற்போது ஒரு வாள்வெட்டுக் குழு உருவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறைச் சந்தியில் நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இரு இளைஞர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெட்டியவர்கள் யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தியவேளையில், பாசையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், புதிதாக வாள்வெட்டு குழுவாக உருவாகியுள்ளனர் என்றும் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாணப் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாசையூர் உட்பட ஈச்சமோட்டை ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது, வாள்வெட்டுக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.