யாழ்ப்பாணத்தில் சகோதரரர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை தடுக்கச் சென்ற மூதாட்டி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இரு சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் தங்கேஸ்வரி (வயது -72) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூத்த சகோதரனுக்கும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், மூத்த சகோதரனை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்றுள்ள போது குறித்த கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள போதிலும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண்ணை கத்தியில் குத்திய 16 வயதுடைய சுபாஷ் சசிகரன் என்ற மாணவனை கைது செய்துள்ளனர்.
அத்தோடு, மேலதிக விசாரணைகளையும் பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.