வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வெள்ளை நாகத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகமொன்று வீதிக்கு வந்தமையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும், குறிப்பாக இந்த நாகம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றிற்குள் சென்றமையினால், அதனை வெளியே எடுத்துவிட முயற்சித்த மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை வயல்வெளியிலிருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது.
வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்தி, குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.
இதனையடுத்து, குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்றுள்ளது. அதனை வெளியில் எடுக்க முயற்சித்தபோதும் முடியாத காரணத்தால், அதனை வெளியில் எடுத்துவிடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டுசெல்லப்பட்டது.
அதன்பின்னர் அங்கு நின்ற ஒருவர் குறித்த பாம்பினை கையால் பிடித்து வெளியில் எடுத்துள்ளதோடு, அந்த பாம்பு கோயில் வழியாக அகன்று சென்றுள்ளது.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்ததுடன், A9 வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


