மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியள்ளது இந்திய அணி.
நேற்றயை தினம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர்கள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் 3 – 0 என கைப்பற்றியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ‘இருபதுக்க இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன் முதல் இரண்டு போட்டியும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று மேற்கிந்திய தீவுகளின் கயானாவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுக்களையும், சைனி 2 விக்கெட்டுக்களையும், ராகுல் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் தொடக்கம் கொடுத்தனர்.
தொடர்ந்து களம் புகுந்த அணித்தவைர் விராட் கோலி மற்றும் விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பான இணைப்பாட்டத்தைப் புரிந்து, அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.
விராட் கோலி 59 ஓட்டங்களை எடுத்து தோமஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பந்த், 19.1 ஓவரில் சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தார்.
ரிஷப் பந்த் 42 பந்துகளை சந்தித்து நான்கு ஆறு ஓட்டங்களுடன் 65 ஓட்டங்களைக் குவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ருவென்டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் முழுமையாக வென்றது.
நேற்றைய போட்டியின் நாயகனாக தீபக் சாஹரும், தொடரின் நாணயகனாக குருணல் பாண்டியாவும் தெரிவு செய்யப்பட்டனர்.