இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு மூன்று இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடரின் முதல் இருபதுக்கு இருபது ஓவர்கள் கொண்ட போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் மேற்கிந்திய அணியை துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்தும் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அந்த அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்போது, கிரோன் பொலார்ட் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய தரப்பில் பந்துவீச்சில் சைனி 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும், வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலகுவான இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போதிலும், மேற்கிந்திய பந்த வீச்சாளர்களை சமாளிப்பதற்கு தடுமாற்றதை எதிர்நோக்கியிருந்தது.
எனினும் அருமையாக போராடிய இந்திய அணி 17 தசம் 2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்த வெற்றியுடன் இந்திய அணி, தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது.
போட்டியின் நாயகனாக, தனது அறிமுகப்போட்டியில் விளையாடிய 23 வயதான நவ்தீவ் சைனி தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, இந்த தொடரின் அடுத்த போட்டியும் அமெரிக்காவின் இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.