இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில், இந்தியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
புளோரிடா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா அணி, தொடரை வெல்லும் முனைப்பிலும், மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை தக்கவைக்கும் முனைப்பிலும் களமிறங்கின.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, கௌரவமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.
இதன்போது, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மா, 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்போட்டியின் போது இரண்டு சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, 107 சிக்ஸர்களுடன் இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், 105 சிக்ஸர்களுடன், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்க 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு சார்பில், ஒசேன் தோமஸ் மற்றும் செல்டோன் கொட்ரேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கீமோ போல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய ரொவ்மன் பவல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்காக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
15.3 ஓவர்களின் போது, கிரன் பொலார்ட் 8 ஓட்டங்களுடனும், சிம்ரொன் ஹெட்மியர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, மழைக் குறுக்கிட்டது.
இதனையடுத்து இடைவிடாது மழை பெய்ததால், வெற்றியை தீர்மானிப்பதற்கு டக்வத் லுயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதற்கமைய இந்தியா அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்போது, இந்தியா அணியின் பந்து வீச்சு சார்பில், குர்ணல் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணி சார்பில், அதிரடியாக 20 ஓட்டங்களையும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய குர்ணல் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, இந்த தோல்வியின் மூலம் இருபதுக்கு இருபது ஓவர்கள் கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் சந்தித்த அணிகள் வரிசையில், 57 தோல்விகளுடன் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன், மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது இடத்தை பகிர்ந்துக் கொண்டது. இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தொடர்ச்சியான அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் வரிசையில் இந்தியா அணி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்த இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி, நாளை கயானா மைதானத்தில் நடைபெறவுள்ளது.