உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது என்கிற ஆச்சர்யம் ஏற்படுகிறது. இந்த உலகுக்கு உண்மையைக் கூறினால், மக்களுக்குப் பிடித்த வகையில் அதைக் கூறினால் எதையும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் – மேதகு.
ஓடிடி சுதந்திரத்தின் காரணமாக சென்சார் கட்டுப்பாடுகளின்றி சொல்ல வேண்டிய உண்மைகளை ஆதாரங்களுடனும் கட்டுப்பாடுகளுடனும் கட்டாயம் சொல்ல வேண்டியதை அப்பட்டமாகவும் மேதகு படம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றைக் கூறியபடி ஒரு கிராமத்தில் தெருக்கூத்துக்குத் தயாராகும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. மிகவும் போற்றப்பட்டவரும் அதேசமயம் விமர்சிக்கப்பட்டவருமான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரின் வரலாற்றைக் கூறும் திரைப்படமாகவும் வீரக்குழுக்கள் உருவாகும் விதமும் அவர்களுடைய போராட்டத்தை விவரித்திடும் வகையிலும் இப்படம் அமைந்துள்ளது.
வல்வெட்டித்துறை 1954 என்கிற எழுத்துப் பின்னணியுடன் பிரபாகரன் பிறப்பு முதல் அவர் பள்ளிப்பருவம், போராட்டச் சூழல், பகத்சிங் படம், சேகுவேரா உள்ளிட்ட புத்தகங்களுடனும் கேள்விகளுடனும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் பிரபாகரனாக நடித்த குட்டி மணி. நேர்த்தியான கதாபாத்திரங்கள் தேர்வு, கூர்மையான வசனங்கள், இயல்பான இசை, சிறப்பான ஒளிப்பதிவு எனக் கூட்டிணைந்து தி. கிட்டு இயக்கத்தில் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது தமிழீழத் திரைக்களம். பிரபாகரனை தம்பி என்று அழைப்பதற்கான காரணத்தைத் தொடக்கத்திலேயே கூறி படம் முழுவதும் அதை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கு தமிழர்களே எதிரி, எட்டப்பர்களே மாவீரனின் அழிவுக்குக் காரணம் என்பதை நாடறியும். இந்தக் கதை சுவாரசியமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படப் பிரபலத்தின் துணையுடனோ போராட்டங்களில் கலந்து கொண்டவர்களின் துணையுடனோ இந்தப் படம் எடுக்கப்படவில்லை. உலகத் தமிழர்களின் உதவியுடன் படத்தை எடுத்து அவர்களுடைய பெயர்களை திரைப்படத்தின் இறுதியில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கையை ஆண்டது புத்தப் பிட்சுகள்தான் என்பதை ஆணித்தரமாகக் கூறுவதுடன் தமிழர்கள் தமக்குக் கீழாக இருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு, அவர்களின் கீழ் நாம் பணியாற்றக் கூடாது என்று பேசியபடி தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த பண்டாரநாயக்க-வை ஒரு புத்தப்பிட்சு துப்பாக்கியால் சுடும் காட்சி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஓடிடி சுதந்திரத்தினால்தான் இந்தக் காட்சி சாத்தியமாகியுள்ளது. தமிழ்க் காவலர் ஒருவர் விசாரணைக்காகத் தமிழர் வீட்டிற்கு வந்து அந்த வீட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது கொடுமை தாங்காமல் காவலரை அந்தப் பெண் தாக்கும் காட்சியும் தமிழாராய்ச்சி மாநாட்டை சிதைக்கும் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொல்லும் காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மேதகு படத்தின் சிறப்பம்சம், படம் எழுப்பும் கேள்விகளும் அதன் வசனங்களும்தான். நாம ஏன் திருப்பி அடிக்கல, உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்… ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம், இனி அதிகாரம் அவர்களிடத்தில் இருக்காது… வெறும் பயம் மட்டுமே பையில் இருக்கும்…, அமைதியாகப் போராடினால் பலன் கிடைக்கும் என்று நம்புவது உலகின் மிகப்பெரிய மூட நம்பிக்கை, எந்த ஆயுதத்தால் எதிரிகள் தாக்குகிறானோ அதே ஆயுதத்தை நாமும் கையில் எடுக்கணும், பயம் ஒன்று மட்டுமே இன்னொருவர் மனதில் அடிமைத்தனத்தை ஆழமாக விதைக்கும், முதல்ல பதட்டத்தை உருவாக்குவோம்… பயம் தானா உருவாகும் என்பன போன்ற வசனங்கள் கூர்மையாக உள்ளன.
படத்தில் இலங்கைத் தமிழர்களின் கடவுளாக முருகன் வணங்கப்படுவது, பிரபாகரன் பீரோவில் பகத்சிங் புகைப்படம், அவர் படிக்கும் புத்தகங்களாக சேகுவேரா, நெப்போலியன் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் என பல விஷயங்கள் நுண்ணியமாகவும் மிகவும் கவனத்துடனும் கையாளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவைக் கொல்லும் பிரபாகரன், காட்டுக்குள் மறைவதுடன் முதல் பாகம் முடிவு பெறுகிறது. மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல.
(நன்றி – Adaderana)