திருகோணமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களில் 100 குளங்களின் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.
திருகோணமலை-மொரவெவ பிரதேசசபையின் தவிசாளரும், தெவனிபியவர ஸ்ரீ இந்திரா ராம விகாரையின் விகாராதிபதியான பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை (31) மாலை புத்தர் சிலை ஒன்றினை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது 74 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று மாதத்திற்குள் 100 குளங்களின் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களை மறந்து நல்லிணக்கத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்றும் காலநிலை மாற்றங்கள் சவாலாக இருந்தபோதும் புதிய திட்டங்களின் மூலம் அந்த சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக தான் முக்கிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், மாவட்டத்தில் விவசாயிகள் முகம் கொடுத்துள்ள நீர் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் குளங்களை புனரமைப்பதற்காக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மூன்று மாத காலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 100 குளங்களின் புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.