இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் திரைப்படத்தில் நடிப்பது உறுதி என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்றுவரும் 66ஆவது இந்திய திரைப்படவிழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் சேதுபதி அங்கு சென்றிருந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தனர்.
இதன் போதே அவர், இந்த திரைப்படம் கிரிக்கெட் பற்றிய திரைப்படமாக இருக்கும் என்பதைவிட முத்தையா முரளிதரனின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானமையை தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்த செய்தியை மறுத்துள்ள விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளமை முரளியின் இரசிகர்களையும் யதார்த்த சிந்தனையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.