சமையலறையில் முதலில் இருக்கும் பொருள் என்றால் கல் உப்பு. உணவுக்கு மட்டும் சுவைகூட்ட பயன்படுவதில்லை. அழகுக்கும் இதை பயன்படுத்தலாம்.

முகத்தை அழகாக்க வெளியில் அதிக விலை கொடுத்துதான் பொருள்களை வாங்க வேண்டுமென்பதில்லை. வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டும் முகத்தை அழகுபடுத்தி கொள்ள முடியும். எல்லாவிதமான ஆரோக்கிய குறைபாட்டுக்கும் கை வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும் என்னும் போது அழகு பிரச்சனைக்கும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டே சரிசெய்துவிட முடியும்.
அந்த வகையில் பல பொருள்களை குறித்தும் அவை தரும் நன்மை குறித்தும் பார்த்திருக்கிறோம். அதில் ஒன்று சமையலில் ருசிக்கு பயன்படுத்தப்படும் கல் உப்பு. விலை மிக்க க்ரீம்கள் செய்யாத அழகு பராமரிப்பை கல் உப்பு செய்துவிடும். அதுவும் சருமத்தின் நிறத்தையே அழகாய் பொலிவாய் மாற்றிவிடும் அளவுக்கு உப்பு சிறந்தது. எப்படி உப்பை கொண்டு பராமரிப்பு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
சருமத்தில் செல்கள் தோன்றுவதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து அழிவதும் பிறகு வேறு செல்கள் உற்பத்தியாவதும் உண்டு. சருமத்தில் இவை சீராக செயல்படும் வரை எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த செல்கள் முகத்திலேயே தங்கிவிடும் போது தான் அழகான முகம் அழகற்று பொலிவின்றி காணப்படுகிறது.
வாரத்துக்கு இருமுறையாவது முகத்துக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் பளிச் என்று மாற்றப்படுகிறது. ஸ்க்ரப் செய்ய பல பொருள்கள் உண்டு. அதில் சிறப்பான பொருள்களில் கல் உப்பும் உண்டு.
6 டீஸ்பூன் கல் உப்புடன் 10 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கலக்கவும். நீரில் வேகமாக கரையும் கல் உப்பு எண்ணெயில் அவ்வளவு சீக்கிரம் கரையாது என்றாலும் அவை நன்றாக ரவை போன்று உடைந்து சேரும் வரை நன்றாக கலக்கவும். பிறகு இதை முகத்தில் மென்மையாக தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை ஸ்கரப் செய்து பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரம் ஒருமுறை செய்தால் முகத்தில் பொலிவு குறையாது.