மும்பையின் தலோஜா பகுதியில் வசித்து வருபவர் மணிஷ் மிஷ்ரா. 28 வயதான இவர், கடந்த ஜூலை 24-ஆம் தேதி தன் மனைவியை தொலைப்பேசியில் அழைத்து, தனக்கு கொரோனா உறுதியானதாகவும், அதனால் விரைவில் தான் இறக்க போவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பதறிப்போன மணிஷின் மனைவி மற்றும் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் என எல்லா இடங்களிலும் அந்த நபரைத் தேடியுள்ளனர். அவரின் இருசக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட்டை கண்டுபிடித்த போலீசார், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்றை செய்திருந்துள்ளார் மணிஷ் மிஷ்ரா. காவல்துறையினர், அவரின் புகைப்படத்தை அனைத்து மாநில காவல்துறையினருக்கும் அனுப்பப்பட்டு தேடியுள்ளனர். அப்போது இந்தூரில் உள்ள ஒரு சிசிடிவியில் சிக்கியுள்ளார் மணிஷ். அவர் ஒரு பெண்ணுடன் காரில் செல்வது அதில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசாருக்கு, மணிஷ் தனக்கு கொரோனா என கூறிவிட்டு இந்தூரில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அங்கிருந்து மணிஷ் அழைத்து வரப்பட்டு போலீசாரால் மனைவியிடம் சேர்த்து வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.