மத நம்பிக்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் ஷகீட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளதுடன், 26ஆம் திகதி வரையில் அவர் இங்கு தங்கவுள்ளார்.
இவர் தனது 12 நாள் பயணத்தின்போது இலங்கை அரசாங்க பிரதிநிதிகள், மத அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சமூகங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது, மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் தடைகளை ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடையாளம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் முன்னைய சிறப்பு அறிக்கையாளர் அஸ்மா ஜஹாங்கீர் கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்ட பின்னர் முன்வைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் அவர் ஆராயவுள்ளார்.
மேலும் இவர் தனது பயணம் தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.