மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலய சுற்றுமதில் தூண்கள் சில விசமிகளால் நேற்று வியாழக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனேரி ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் தூண்கள் சில உடைக்கப்பட்டதுடன், ஆலயத்தின் கற்பூரம் எரிக்கும் சட்டியை உடைத்து ஆலய மூலஸ்தானத்தினுள் சிறுநீர் கழித்துள்ளதுடன், மூலஸ்தான நுழைவாயிலில் சீமெந்துகளை கொட்டிய செயற்பாடுகளை இன நல்லுறவை சீர்குலைக்கும் சில நாசகார விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வாகனேரி பகிலாவலை ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கம்பெரலிய திட்டத்தில் நிதி ஓதுக்கப்பட்டு சுற்று மதிலுக்கான அத்திவாரம் அமைக்கும் பணி இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் ஆலய காணி எல்லை பிரச்சனை தொடர்பாக தீர்வு பெற்றதன் பின்னர் கட்டட வேலைகளை ஆரம்பிக்குமாறும், குறித்த கட்டட வேலைகள் தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரால் நேற்று வியாழக்கிழமை மாலை உத்தரவு வழங்கப்பட்டதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அங்கிருந்து அனைவரும் சென்ற நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றுமதில் அமைப்பதற்காக அத்திவாரம் மற்றும் தூண்கள் சிலவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அத்திவாரத்துக்கு அருகில் கட்டை அமைத்து கம்பி வேலியும் நாட்டப்பட்டுள்ளது.
ஆலயத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் சில தூண்கள் உடைக்கப்பட்டதுடன், ஆலயத்தின் கற்பூரம் எரிக்கும் சட்டியை உடைத்து ஆலய மூலஸ்தானத்தினுள் சிறுநீர் கழித்துள்ளதுடன், மூலஸ்தான நுழைவாயிலில் சீமெந்துக்களை கொட்டியுள்ளமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வாகனேரி ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயத்தின் விக்கிரம் அருகில் காணப்படும் பற்றைக்குள் வீசப்பட்டும், ஆலயம் சேதமாக்கப்பட்டும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.