மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எனது தந்தை ஆர்.பிரேமதாச எந்தவொரு தேர்தலிலும் தோல்வியுற்றதில்லை. அவருடைய புதல்வரான நானும் தோற்கப் போவதில்லை.
மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டேன்.
தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கையைக் கருத்திற்கொண்டே எனது சேவைகள் இடம்பெறும்.
தொழில் முயற்சி மற்றும் தொழில்நுட்பத்தினூடாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். மேலும் இயற்கை வளங்களைக் கொண்டு பாரியளவிலான கைத்தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டிலுள்ள 332 பிரதேச செயலகங்களிலும் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க எண்ணியுள்ளேன்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.