பௌத்த பிக்குகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டுவரும் ஐக்கியதேசியக் கட்சியின் பெருந்தெருக்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது பௌத்த சிறுவர் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பௌத்த தர்மத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்து கற்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் தலைமை பிக்குகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 07 சிறுவர் பிக்குகள் எச்.ஐ.வி தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை நீக்கினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கவுள்ளதாகவும் சூளுரைத்தார்.
‘புண்ணியச் சோறு சாப்பிடுகின்ற பல்வேறு பௌத்த பிக்குகள் இன்று கற்றலுக்காக வருகின்ற பௌத்த சிறார் பிக்குகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர். இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கின்ற 07 சிறுவர் பிக்குகள் தற்போது எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த பல காலங்களாக எனக்கு இதுவிடயம் குறித்து பல்வேறு பாதிக்கப்பட்ட தரப்பினரும் முறைப்பாடுகளை செய்துவந்தனர். இயலாத கட்டத்திலேயே நான் தற்போது அவற்றை அம்பலப்படுத்தி விசாரணைக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றேன். இதன் காரணமாக என்னை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும், அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்குமாறு அழுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் பிரயோகித்து வருகின்றனர்.
அவ்வாறு கட்சியிலிருந்து என்னை நீக்கினாலும் ஒரு சினிமா நடிகராக நான் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிகோரலுக்கான குரலை எழுப்பிவருவேன். என்னிடம் முறையிட்ட பல்வேறு சிறுவர் பிக்குமார்களுடைய பெற்றோரிடம், ஏன் என்னிடம் இதனை முறையிடுகிறீர்கள், முறையிட விசாரணை செய்கின்ற பகுதிகளுக்குச் சென்று முறையிடலாமே என வினவியிருக்கின்றேன். அதற்கு அவர்கள், பலதடவை அவ்வாறு முறையிட்டிருந்தாலும் நீதி கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.
எனவே என்னிடம் சிறுவர் பிக்குகளுக்கு நடந்த கொடுமைகளுக்கான ஆதாரங்கள், காணொளிகள், தொலைபேசி உரையாடல்கள் எனப் பல வைத்திருக்கின்றேன். விசாரணை நடத்தப்படும்போது அவற்றை அம்பலப்படுத்துவேன்” எனத் தெரிவித்தார்.