வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றமையின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 2 என்ற கணக்கில் சமநிலைபடுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி லண்டன்- கெனிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும், ஜோ ரூட் 57 ஓட்டங்களையும், ரொறி பர்ன்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து அணியின் பந்த வீச்சை சமாளிக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சகனே 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில், ஜொப்ரா ஆர்செர் 6 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 69 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய அவுஸ்ரேலியா அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோ டென்லி 94 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில், நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ், பீட்டர் சிடில் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியினால், 263 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.
இதனால் இங்கிலாந்து அணி, 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மெத்தியு வேட் 117 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்து வீச்சில் ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இத்தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவுப் பெற்று, ஆஷஸ் கிண்ணம் இரு அணிகளின் தலைவர்களுக்கும் பகிரப்பட்டாலும், நடப்பு சம்பியன் அந்தஸ்தை பெற்றிருந்த அவுஸ்ரேலியா அணிக்கு இந்த சம்பியன் கிண்ணத்தின் பெரும்பான்மை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்செர் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகர்களாக அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றதன் மூலம், 1972ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரொன்று சமநிலைப் பெற்றுள்ளது.
அத்துடன், ஆஷஸ் தொடரொன்றில் அதிக ஓட்டங்களை குவித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் 7 இன்னிங்சுகளில் விளையாடி 144, 142, 92, 211, 82, 80, 23 ஓட்டங்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக நடப்பு தொடரில் அவர் 774 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில், கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் டொன் பிரட்மன் 974 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.