.
கண்டி மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பு சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் கண்டி அமைப்பாளர் விபுலரணசிங்க குறித்த மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார்.
பொதுமக்களின் அரசாங்கமொன்றை ஏற்படுத்தி நாட்டிலும் சமூகத்திலும் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
“கண்டி தேர்தல் தொகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்த எனக்கு நன்கு தெரியும். வீட்டுப்பிரச்சினை பாரிய பிரச்சினையாகும். தமது காணிகளுக்கு உறுதிபத்திரம் இல்லாமை மற்றுமொரு பாரிய பிரச்சினை. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுத்துள்ளீர்கள். இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் பொதுமக்களுக்கான ஒரு அரசாங்கத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். நல்லிதயம் கொண்ட ஒரு அரசாங்கத்தைதேயே நாங்கள் உருவாக்குவோம். நாட்டு மக்களை பாதுகாக்கக்கூடிய நாட்டிற்காக வேலை செய்யும் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய பொதுமக்களின் யுகத்தை உருவாக்குவோம். அது தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினாலேயே உருவாக்கப்படும்.”