புத்தளம் – அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்காக கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட நான்கு டிப்பர் வாகனங்கள் பொதுமக்களின் நெருக்கடியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற நான்கு டிப்பர்களை புத்தளம்-மன்னார் பிரதான வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் வைத்து, பொதுமக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த குப்பைகள் எவ்வித மீள் சுழற்சியும் செய்யப்படாமல் கொண்டுசெல்லப்பட்டதால், வீதிகளில் துர்நாற்றம் வீசியதாகவும் அந்த குப்பைகளில் இருந்து அசுத்த நீர் வழிந்தோடியதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளளவு எல்லை கடந்ததால் மேலும் குப்பைகளைச் சேகரிக்க முடியாமற்போனது. இதனால் கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் தேங்கிக் கிடந்தன.
புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கிணங்க, கொழும்பு நகர சபை குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, முற்றாக அகற்ற மேலும் இரண்டு நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, குப்பைகளை கொட்டும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.