புல்வாமா தாக்குதலில் பலர் உயிரிழந்தமைக்கு இந்திய உளவுத்துறையினரின் குறைபாடுகளெ காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புல்வாமா தாக்குதல் தொடர்பில் சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய இராணுவத்தை சேர்ந்த பலர் உயிரிழந்திருந்தனர்.
இது தொடர்பில் சீ.ஆர்.பி.எப் அமைப்பு அறிக்கை தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையில் தாக்குதல்களுக்கு முன்னர் வழக்கமாக கூறப்படும் எச்சரிக்கை மட்டுமே இருந்ததாகவும், கார் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்பது பற்றிய எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத்துறை அமைப்புகளும் இந்த தாக்குதல் தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை எனவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 44இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.