ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பசோவின் வட பகுதியில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீதும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
மக்களை ஏற்றிச்சென்ற ஒரு வாகனம் பார்சலோகோ பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை எடுத்துச் சென்ற வாகனத்தில் இருந்த உணவை கையளிக்கும்போது குறித்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புர்கினா பசோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாட்டின் இராணுவத்தின் மீது கிளர்ச்சியலாளர்கள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்தமாத ஆரம்பத்தில் வடக்கு புர்கினா பசோவில் ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.