முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற, முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம்.
ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது.
பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எங்களது உரிமைகளுக்காக அத்தனை பலங்களையும் பிரயோகித்து போராட வேண்டும்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உடமைகளுக்கும் கண்ணியத்துக்கும் சில சோதனைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் முகம் மூடுவதை தற்காலிகமாக தவிர்ந்துகொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பெண்களுக்கு அறிவிறுத்தியிருந்தன.
முஸ்லிம் விவாவக, விவாகரத்து சட்டம் முழுவதும் ஷரீஆ அல்ல. அதற்கு முரணான சில விடயங்களும் அதில் காணப்படுகின்றன. உதாரணமாக, இஸ்லாத்தில் இல்லாத சீதனம் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இதை இல்லாமல் செய்யவேண்டும். சமூகத்தில் செய்யப்பட்ட சில வழக்காறு விடயங்களையும் உள்வாங்கி செய்யப்பட்ட இந்த சட்டத்தில், இன்னும் ஓரிரு விடயங்கள் மாத்திரமே இணக்கப்பாடில்லாமல் இருக்கிறது. இவற்றுக்கும் விரைவில் விடைகாணலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம் என்றார்.