புலனாய்வுப் பிரிவை கூட்டி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மதிப்பீடுகளை செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்தவகையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு மதிப்பீடுகளைச் செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைவாக மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்கள் தமது சேவைக்கு உட்பட்ட மாகாண பாதுகாப்பு நிலைமை குறித்து அரச புலனாய்வு சேவை விஷேட பணியகம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகிய பிரிவுகளின் அதிகாரிகள், மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர்கள் தொகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளை அழைத்து மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஏப்ரல் 21இல் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி பாதுகாப்பு சபைக் கூட்டங்கள், விசேட குழு விசாரணைகள், தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், மாகாணங்கள் ரீதியாக பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடைமுறையை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.