பாடசாலைகளை மீள ஆரம்பித்தமை தொடர்பில் பெற்றோர் அரசாங்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமைக்கு அனைவரும் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணைக்கான ஆரம்ப தினத்தில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியரின் வருகை திருப்திகரமாக அமைந்துள்ளது.
மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் இயங்கும் பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் நேற்று முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
நேற்று மாணவர் வருகை 51 சதவீதமாகவும், ஆசிரியர் வருகை 58 சதவீதமாகவும் இருந்தது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டியதாகவும், அடைமழை உள்ளிட்ட சிரமங்களுக்கு மத்தியில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வந்ததை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிரிவின் செய்திளார் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என குடும்ப சுகாதார பணிமனையின் விசேட நிபுணர் கித்திரமாலி டீ சில்வா கேட்டுக் கொண்டார்.
மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்கையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டீ சில்வா கருத்து வெளியிடுகையில், இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.