காஷ்மீர் பிராந்தியத்தில் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடக்கம் இந்தியாவின் மீது பாகிஸ்தான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றது.
பிரதமர் மோடியின் அரசாங்கத்தை பாசிச, இந்து மேலாதிக்க அரசு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவீட்டில், ‘பாசிச, இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் மேற்கொள்ளவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறிப்பிட்ட பிராந்தியத்துக்கான பிரச்சினை மட்டுமல்ல. உலகம் முழுதிற்குமே தாக்கம் ஏற்படுத்தக் கூடியது” என்று இன்னொரு டுவிட்டிலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் தடுப்பு முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் வெறிபிடித்தது போல் செயற்படுகிறார்.
சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் இப்போதே தலையிடவில்லையெனில் இது பரவலாக இடம்பெற வாய்ப்புள்ளது” என மற்றொரு டுவிட்டிலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்மையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம்.
எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றங்கள் வரலாம்” என்று கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிர்வினையாகவே பாகிஸ்தான் பிரதமரின் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.