திருகோணமலை நகரமம் சூழலும் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது.
இந்த அமர்வின் போது, கன்னியா சுடுநீர்க்கிணறு விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.
இதன் போது, கன்னியா சுடுநீர்க்கிணறு அமைந்திருக்கும் பகுதி பாசியால் நிறைந்து சுற்றுலாப்பயணிகள் வழுக்கிவிழக்கூடிய ஆபத்தான நிலைமை இருப்பதாகவும் அதன் சுற்றுச்சூழல் துர்நாற்றம் வீசுவதாகவும் உறுப்பினர் விபுசன் அவர்களால் கொண்டுவரப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சுகாதார பரிசோதகர் இருவரை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டபோது, தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
“தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசம் என்பதாலும் கன்னியா சுடுநீர் கிணறு சம்மந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் சுத்தப்படுத்த அனுமதிக்க முடியாது” எனக்கூறி அவர்கள் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக மேலதிக செயற்பாட்டினை மேற்கொள்வதாகவும் இவ் விடயத்தினை இன்றையதினம் ஊடக அறிக்கை மூலம் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஒருவர் வழுக்கிவிழுந்து காயப்பட்டதாகவும் முறைப்பாடொன்று கிடைக்கப்பட்டது கவனத்திற்கொள்ளத்தக்கது.