அது ஓர் அந்தி நேரம். துவாரகைக்கு வந்து தங்கியிருந்தான் அர்ஜூனன்.
கிருஷ்ணனின் விருந்தினர் மாளிகை உப்பரிகை. சூரியன் மறைந்திருந்தான். ஆனால், இருள் இன்னும் கவிய ஆரம்பித்திருக்கவில்லை.
சூரியனின் செங்கதிர்களின் மிச்சம் மட்டும் கீழ்வானத்தை ஆரஞ்சு நிறத்தில் அடித்திருந்தது. அந்தப் பேரழகில் தன்னை மறந்து லயித்திருந்தான் அர்ஜூனன்.
”அர்ஜூனா…’’ என்றபடி அவன் அருகே வந்து நின்றார் கிருஷ்ணர்.
சுயநினைவுக்கு வந்தவனாக, கண்ணனைத் தொழுது வணங்கினான்.
”என்ன அந்தி வானத்தின் அழகில் சொக்கிக்கிடக்கிறாயா?’’
”ஆம் கண்ணா! அதில்கூட உன்னையே தரிசித்துக்கொண்டிருந்தேன்…’’ அர்ஜூனனின் குரலில் லேசாகப் பெருமிதம்..!
”என்னையா?’’
”உன்னையேதான். ஆதவன் மறைந்தாலும் அதன் சுடரொளி சிறிது நேரத்துக்காவது ஒளிர்கிறது அல்லவா? அதுபோல் உலகில் எத்தனைத் தீயவனாக ஒருவன் இருந்தாலும், அவன் இறுதிக் கணத்தில், இப்பொழுதாவது இவன் திருந்த வேண்டும் என்கிற எண்ணம் உனக்கு இருக்கும். மறைந்த சூரியனின் கதிரைப்போல் அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பாய். ஏனென்றால், அது உலகில் உள்ள உயிர்களிடத்தில் உனக்கு இருக்கும் பெருங்கருணை.’’
இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜூனன் முகத்தில் கேள்விக்குறி.
”அதாவது, சதா சர்வகாலமும் எனக்கு என் நினைப்புத்தான் என்பதை நிரூபிக்க விரும்புகிறாய்…’’
”இதில் சந்தேகம் என்ன கண்ணா? நீயே எனக்கு எல்லாமும்… அதன்படிதானே வாழ்கிறேன்?’’
”அப்படியானால், என் மேல் செலுத்தும் பக்தியில் உன்னை மிஞ்ச ஆள் இல்லை என்கிறாய்?’’
”நிச்சயமாக.’’
”தவறு அர்ஜூனா. உன்னையும்விட என் மேல் ப்ரியமுடன் கூடிய பக்தி செலுத்துகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.’’
”ஏன் பரமாத்மா இந்த விளையாட்டு… அதை நிரூபிக்க முடியுமா?’’ என்றான்.
”புறப்படு என்னோடு. அது எந்த தேசம், யார் எவர் என்றெல்லாம் கேட்கக் கூடாது. சம்மதமா?’’
அர்ஜூனன் உடன்பட்டான். இருவரும் கிளம்பினார்கள்.
பகவான் தன் அரண்மனைக்கு வருவார் என்று அந்த அரசர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் அவர் துணைவியும் சிறுவயது மகனும் அவனை நெஞ்சார வணங்கி வரவேற்றார்கள். பக்தியோடு உபசரித்தார்கள். பகவான், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.
”உங்களுக்கு என் மீது மாறாத பக்தி உண்டு அல்லவா?
’’ஆம் பெருமானே!’’
”நான் ஒன்று கேட்டால் தருவீர்களா?’’
”உயிரையும் தருவோம்.’’
”சரி. ஆனால், ஒரு நிபந்தனை.’’
”என்ன?’’
”எனக்கு நீங்கள் தானம் கொடுக்கும்போது, உங்கள் இல்லத்தில் ஒருவர் கண்ணிலும் துளிக் கண்ணீர்கூட வரக் கூடாது.’’
”சம்மதம்.’’
உடன் வந்திருந்த அர்ஜூனன், அங்கே நிகழ்வதை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
”என்ன வேண்டும் பகவானே!’’ ஆர்வமும் பரவசமும் குரலில் தொனிக்கக் கேட்டார் அரசர்.
”உங்கள் பாலகனை இரண்டாகப் பிளந்து, அவனுடைய உடலின் வலதுபாகத்தை மட்டும் எனக்குத் தரவேண்டும்.’’
“என்ன கொடுமை இது… கண்ணனின் திருவாயில் இருந்தா இந்த வார்த்தைகள்!’’ அர்ஜூனன் விதிர்விதிர்த்துப் போனான். ஆனால், அங்கிருந்தவர்கள் முகங்களில் எந்தச் சஞ்சலமும் இல்லை. அர்ஜூனன் ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
அதே நேரத்தில், பகவான் அங்கிருந்தவர்களின் முகங்களைக் கூர்ந்து பார்த்து ஆராய்ந்துகொண்டிருந்தார். அரசர் முகம் நிச்சலனமாக இருந்தது. அரசியின் முகத்தில் அதே சாந்தம், பரவசம், பக்தி. அந்த இளவரசனான பாலகன்… அவன் முகம்… அவன் கண்ணில்…
“அட… இது என்ன… இளவரசனின் இடது கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்?’’ கேட்டார் கிருஷ்ணர்.
அதற்கு அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பதில் சொன்னான்… “மன்னிக்க வேண்டும் பரந்தாமா! நீங்கள் என் உடலின் வலது பக்கத்தைக் கேட்டீர்கள். அது உங்களுக்குப் பயன்படுகிறதே என்கிற திருப்தி ஒருபுறம். ஆனால், உங்களுக்குப் பயன்படாமல் வீணாகப் போகிறோமே என என் உடலின் இடது பாகம் வேதனைப்படுகிறது. அதனால் எழுந்தது இந்தக் கண்ணீர்…’’
கிருஷ்ணர் அர்ஜூனனைத் திரும்பிப் பார்த்தார்.
அவன் பகவானின் பாதங்களில் வீழ்ந்து கெட்டியாகப் பற்றிக்கொண்டான். “மன்னித்துவிடு கிருஷ்ணா… கிருஷ்ண பக்தியில் நான் சிறுபிள்ளை. என்னைவிட உயர்ந்தோர் உள்ளார்கள் என்பதை உணர்த்திவிட்டாய். மன்னித்துவிடு… மன்னித்துவிடு…’’
கிருஷ்ணரின் வதனத்தில் அதே மென் சிரிப்பு!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா