சர்க்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
- தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.
- தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.
- பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்
- ஆறாத காயங்கள்
தோலை(அ)சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்
- தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
- குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு சுத்தமான துணியால் துடைத்து சுத்தம் செய்தல் வேண்டும்.
- வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்
- தோலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்