உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் என்ற வீதத்தில் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் 8 இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், போர், கொலை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு பறிபோகும் உயிர்களைவிட தற்கொலைகள் அதிகம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம், நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதார அமைப்பின் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனாம் ஜிப்ரேயசஸ் தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை எண்ணிக்கை 10 தசம் 5 பேருக்கு இருந்ததாகவும், எனினும் சில நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 5 பேர் முதல் 30 பேர் வரை இந்த எண்ணிக்கை வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள்தொகை சீராக அதிகரித்து வந்துள்ள போதிலும், தற்கொலை எண்ணிக்கை கடந்த 2010 முதல் 2016 வரை ஒரே அளவில் நீடிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் நடப்பதாகவும், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் உகாண்டா, இலங்கை, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.