நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.