முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உயிர்நீத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையிலான பிக்குகள் சிலர் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்துள்ளனர்.
ஆலய வளாகத்தை அண்மித்துள்ள கடற்கரை பகுதியில் தேரரின் பூதவுடலை தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று முற்பகல் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும், இந்த தீர்ப்பை பொருட்படுத்தாது பிக்குகள் சிலர், உயிர்நீத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நீராவியடி விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்யும் முயற்சியை தடுக்குமாறு கோரி ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை நேற்று முன்தினம் செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய, நீதிமன்ற தீர்ப்பு இன்று வழக்கப்படும் வரை தேரரின் பூதவுடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையில், நீராவியடி கடற்கரை பகுதியில் பூதவுடலை தகனம் செய்ய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை மீறி ஆலய வளாகத்திலேயே பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பிக்குகளை தடுக்காது, அதற்கு எதிராக குரல் கொடுத்த தமிழர்களையே பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டினை தெரிவித்ததுடன், விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
