திருகோணமலை நகருக்கு செல்லும் எவரும் மனிதர்களுடன் மான்கள் சுற்றி திரிவதை காண முடியும்.
சிவ பக்தனான மன்னன் இராவணன், சிவாலயமான கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்த மான் ஜோடியின் பரம்பரையே திருகோணமலை நகரில் வாழ்ந்து வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை.
திருகோணமலை நகரில் பேட்ரிக் கோட்டை கட்டிய ஒல்லாந்தர், கோட்டைக்கு அருகில் சுற்றி திரியும் மான்களுக்கு உணவுகளை கொடுத்து வந்ததால், இங்குள்ள மான்கள் நீண்டகாலமாக மனிதர்களுடன் வாழ பழகிக்கொண்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், விலங்குள் குறித்து ஆய்வு நடத்துவோரும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நகரில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இந்த மான் பரம்பரையின் வரலாறு எதுவாக இருந்தாலும் தற்போது அவற்றின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக மாறி விட்டது
திருகோணமலைக்கு அழகு சேர்க்கும் மான்களை பாதுகாப்பதற்காக அண்மையில் நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு சங்கமித்தை விடுதிக்கு அருகே மான்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டு அவற்றிற்கு உணவு போடுவதற்காக ஒரு தளமும் அமைக்கப்பட்டது. இது தற்போது பாவனையிலுள்ளது.
இருப்பினும், மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவற்றிற்கு போதிய பாதுகாப்பில்லை. அண்மையில் 02 மான்கள் கொல்லப்பட்டு வாகனத்தில் இறைச்சிக்காக கொண்டு சென்ற போது பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டதையும் அறிந்திருப்பீர்கள்.
மேலும், இந்துக்கல்லூரி மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள நச்சற்ற உணவு விற்பனை நிலையத்திற்கு பின்னால் பல மான்கள் தங்கியிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது, இவற்றின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றது.
இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி Chain ling fence அமைத்து நகரின் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும் மான்கள் யாவற்றையும் இப்பகுதியிலும், கோட்டைக்கு உள்பகுதியிலும் விடுவதற்காக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பகுதிக்கு மேற்கூறிய வேலி அமைக்கப்பட்ட பிற்பாடு அப்பகுதியினுள் அதிகளவு மரங்கள் நடப்படுவதுடன் அவை வளர்ந்து நிழல் தரும் வரை மான்களை வெயிலிலிருந்து பாதுகாக்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மான்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தின் நுழைவாயிலிற்கருகே மான்களின் உணவு விற்பனை செய்யும் நிலையமும் வனபரிபாலன சபையினரின் ஆலோசனையுடன் அமைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்திற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மான்களை பார்வையிட உள்ளே செல்பவர்கள், இவ்விற்பனை நிலையத்திடமிருந்து வன விலங்குகள் பரிபாலன திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உணவுகளை வேண்டி கொடுப்பதற்கான வசதிகளும் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக நலன் விரும்பிகளிடமிருந்து ஆலோசனைகளும், வழிகாட்டல்களும், பங்களிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.