திருகோணமலை, ஆலங்கேணி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் தலா 27500/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 3 பேரையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர்படுத்திய போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த 23, 40 மற்றும் 45 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
கடந்த புதன்கிழமை திருகோணமலை மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மூன்று சந்தேக நபர்களையும் கசிப்பு கேன்களுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அது ஏற்படுத்திய வேளை ஏற்கனவே முன் குற்றங்கள் இல்லாமையினால் அவர்களை விடுவிக்குமாறும் 27,500 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் பிணை வழங்க முடியாது போகும் எனவும் நீதவான் எச்சரிக்கை செய்து சந்தேகநபர்களை விடுவித்தார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது கசிப்பு அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கூடுதலான இடங்களை சுற்றி வளைத்து வருவதாகவும் தொடர்ந்தும் சுற்றுவளைப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.