திருமணத்திற்கு பிறகு வேறொரு நபருடன் உண்டாகும் காதலே திருமணத்தை மீறிய உறவு என்கின்றனர். ஆனால் இந்த பார்வையானது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்னை. இது ஒரு புறம் இருக்க இதுபோன்ற கருத்துக்களுக்கு எதிராக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது திருமண உறவிலிருந்து விலகி மற்றொரு நபருடன் உறவு வைத்துக்கொள்வதில் பெண்கள் அதிக நாட்டம் செலுத்துவதாக டேட்டிங் ஆப்-ஆன கிளீடன் கூறியுள்ளது. அதுவும் குழந்தைக்கு தாயான அம்மாக்களே அதிகம் என்கிறது இந்த கணிப்பு.
கிளீடன் ஆப் ஒரு பெண்ணால் நிறுவப்பட்டு பெண்களுக்காக இயங்கும் ஒரு ஆப் ஆகும். குறிப்பாக திருமணமான பெண்களுக்காக பாதுகாப்பான முறையில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் காதல், செக்ஸ் அல்லது நட்பு என எந்த வகையிலும் விருப்பத்திற்கு ஏற்ப பழகலாம். அப்படி இந்த ஆப்பில் இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பேர் பயணாளர்களாக உள்ளனர்.
இந்த ஆப்பில் இந்தியாவைச் சேர்ந்த 30-60 வயதிற்கு உட்பட்ட நன்கு படித்த, நகர்புறத்தில் வசிக்கும், நன்கு பொருளாதாரம் வளத்தில் சுந்தந்திரமாக இருக்கும் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இதில் 48% பெண்கள் திருமணத்தை மீறிய உறவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் குழந்தைக்கு தாயாக உள்ள பெண்கள் எனக் குறிப்பிடுகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ள கணிப்பு படி 64 சதவீதம் பெண்கள் திருமண உறவில் செக்ஸ் வாழ்க்கை திருப்தி இல்லாத காரணத்திற்காக திருமணத்தை மீறிய உறவை கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
கிளீடன் 2020 ஆண்டு நடத்திய ஆய்வில் 55 சதவீதம் திருமணமானவர்கள் தன் துணையை ஏமாற்றுவதை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதில் 56 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கணிப்பு, திருமணமான 25-50 வயதுகொண்ட 1,525 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 48% பேர் ஒரே சமயத்தில் மற்றொருவர் மீதும் அல்லது பல பேருடன் அதே காதலை உணர முடியும் எனக் கூறியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது பெண்கள் ஆண்களுக்கு எதிரான துரோகத்தை செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது போல் தெரிந்தாலும் மற்றொரு ஆய்வானது இந்த மாற்றம் ஆண் கர்வம் கொண்ட சில ஆண்களுக்கு எதிரான மாற்றமாக பார்க்கப்படுகிறது என்கிறது.
இந்தியாவில் பாரம்பரியமாக பெண்கள் இவ்வாறான விஷயங்களில் ஈடுபட்டாலே அது குடும்பத்திற்கு மட்டுமல்லாது சமூகத்திற்கே எதிரான துரோகமாக பார்க்கப்பட்டது. பெண்களிடையே இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆண்களே பெண்களைக் காட்டிலும் திருமணத்தை மீறிய உறவில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆனால் அது இன்று வரை தவறாகவோ..ஏன் என்கிற கேள்வியாகவோ எழும்பவில்லை. அது அவர்களுடைய திருமண உறவையோ அல்லது குழந்தை வளர்ப்பையோ பாதிக்கவில்லை. ஆனால் பெண்கள் செய்தால் ஏன் இத்தனை கேள்வி என்பதுதான் பிரச்னை. அமெரிக்க ஜெனரல் சோஷியல் சர்வே 20 சதவீதம் ஆண்கள்தான் பெண்களை ஏமாற்றுவதாகவும், அவர்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் 13 சதவீதத்தினரே என்கிறது. ஆனால் இதை ஏன் ஒரு பிரச்னையாக பேசுவதில்லை என்பதே பலருடைய கேள்வி.