திருகோணமலை பொது வைத்தியசாலை மலசல கூடங்களில் தண்ணீர் இன்மையினால் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்கள் சாய்சாலை மற்றும் வலி நோயாளர்கள் பிரிவுகளுக்கு வருகைதந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அவசர தேவையான மலம் மற்றும் சலம் கழிப்பதற்கு செல்கின்றபோது மலசலகூடத்தில் தண்ணீர் இல்லாமையினால் நோயாளர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
வறட்சி காலங்களில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் தண்ணீர் இல்லாமல் போவதை தெரிந்திருந்த போதிலும் அதனை அண்மித்த பகுதியில் பொதுக்கிணறு காணப்படுகின்ற பட்சத்தில் தண்ணீரை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமையினால் நோயாளர்கள் இன்னும் அதிகளவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாக்கி வருவதாகவும் நோயாளர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களிலிருந்து மூதூர்- புல்மோட்டை- கிண்ணியா கிளிவெட்டி மற்றும் ஹொரவ்பத்தான போன்ற பகுதிகளிலிருந்து வரம் நோயாளர்கள் தண்ணீர் இல்லாமல் மலசலம் கழிப்பதற்கு கூட தயங்கி ஆங்காங்கே ஓடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலை மத்திய அரசாங்கத்திற்கு உள்வாங்கப்பட்டதையடுத்து வைத்திய சாலையின் குறைபாடுகள் குறித்து கிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அதனாலயே இவ்வாறான அசௌகரியங்கள் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே நோயாளர்களின் நலன் கருதியும் பொது மக்களின் நலன் கருதியும் திருகோணமலை பொது வைத்தியசாலை மலசல கூடத்திற்கு தண்ணீர் இல்லாமையினால் மிக விரைவில் அதாவது வறட்சி காலங்களில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.